ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் பழைய வீடியோ சமீபத்தில் கேரளாவில் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் குறிப்பாக, கேரளாவில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயிலை பற்றி குறிப்பிட்டு பேசிய நீதிபதி, கேரளாவில், மாநில அரசு, வருவாய்க்காக கோயில்களை, குறிப்பாக ஹிந்து கோவில்களை கையகப்படுத்துகிறது எனகூறியிருந்தார். இதுகுறித்து பேசிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், “பொதுவாக வழிபாட்டுத் தலங்கள் மீது கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையில் கேலிக்கூத்தாக உள்ளது. கோட்பாட்டளவில், எந்த கம்யூனிஸ்டுகளும் கடவுள், கோயில்கள், சடங்குகள் போன்றவற்றை நம்ப முடியாது. ஏனெனில் அவர்கள் இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தை நம்புகிறார்கள். அது கடவுளுக்கும் அது தொடர்பான விஷயங்களுக்கும் இடமளிக்காது. அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கூறினால், அவர்களால் கடவுளை வணங்க முடியாது. ஒருவேளை கடவுள், கோயில்கள் மற்றும் சடங்குகளை ஒப்புக்கொண்டால் அவர்கள் மார்க்சிய தத்துவத்தின் மனோதத்துவ அம்சங்களை நீர்த்துப்போகச் செய்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால், கேரளாவில், அவர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் தங்களை மத நம்பிக்கையின் பாதுகாவலர்களாக முன்னிறுத்த விரும்புகிறார்கள். எந்த குள்ள நரியாலும் கோழிகளை பாதுகாக்க முடியாது. அதுபோல வழிபாட்டுத் தலங்களை கம்யூனிஸ்டுகளால் பாதுகாக்க முடியாது. இந்த வழக்கில் இந்து மல்ஹோத்ரா தவறாக எதுவும் கூறியதாக நான் நினைக்கவில்லை கேரளாவில், கம்யூனிஸ்ட்டுகள் கோயில்கள், அவற்றின் நிர்வாகத்தின் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிலிருந்து பணத்தை சுருட்ட வேண்டும் நினைக்கின்றனர். சட்டவிரோதமான பலன்களை அடைகிறார்கள். மற்றொரு பக்கம், அவர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைத் தோற்கடித்து தங்களது சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்” என கூறினார்.