பள்ளி கல்லூரிகளில் கர்நாடக அரசின் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சுமார் 23 மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ஹிஜாப் தடை வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய முஸ்லிம் தரப்பு மனுதாரர்களை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, செப்டம்பர் 5ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, ஜூலை 13 அன்று, மனுதாரர்களின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மனுக்களை அவசரமாகப் பட்டியலிடக் கோரினார். ஹிஜாப் அணிய விரும்பும் மாணவிகள் இதன் காரணமாக படிப்பில் பின்தங்குகின்றனர் என்று கூறியிருந்தார். அதற்கு, இந்த வழக்கை ஒரு வாரம் கழித்து உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என்று முன்னாள் தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்திருந்தார். ஆனால், மனுக்கள் பட்டியலிடப்படவில்லை. மனுக்களை விசாரிக்க இருந்த நீதிபதிகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததே இதற்குக் காரணம் என்று ஆகஸ்ட் 2ம் தேதி ரமணா குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.