தென்னை மேம்பாட்டு வாரியம் வரும் செப்டம்பர் 2ம் தேதி 23வது உலக தென்னை தினக் கொண்டாட்டங்களை நடத்த உள்ளது. வேளாண் துறைக்கான மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இந்த ஆண்டின் உலக தென்னை தினக் கொண்டாட்டங்களை குஜராத்தில் உள்ள ஜூனாகாட்டில் மெய்நிகர் முறையில் துவக்கி வைக்க உள்ளார். அங்கு மாநில தென்னை வாரிய மையத்தையும் அவர் துவக்கி வைக்கிறார். தென்னை வாரியத்தின் தேசிய விருது பெற்றவர்களை அறிவிப்பதோடு ஏற்றுமதியில் சிறந்து விளங்கியோர் விருதுகளையும் அறிவிக்கிறார். இந்த ஆண்டுக்கான உலக தென்னை தின கொண்டாட்டங்களுக்கான கருப்பொருளாக “நாளைய நன்மைக்காகவும், வாழ்க்கைக்காகவும் தென்னை வளர்ப்பு” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், வேளாண் துறைக்கான இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். தென்னை வளர்ப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள ஏழு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த சர்வதேச பயிலரங்கில் பங்கு பெற்று உரையாற்ற உள்ளனர்.