காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தற்போது விலகும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வகையில் மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான தெலங்கானாவைச் சேர்ந்த எம்.ஏ. கான் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. “கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தத் தயாராக இல்லை. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ஆன பின்னர் அவர் தன்னிச்சையாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டார். அவருடைய சிந்தனைகள் வேறாக உள்ளன. அதில் கட்சியின் அடிமட்டத் தொண்டர் முதல் உயர்மட்டத்தினர் வரை யாருக்கும் உடன்பாடில்லை. இதன் விளைவுதான் காங்கிரஸின் வீழ்ச்சி. இதனால் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்களுடன் பழகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது பழைய பெருமையை மீட்டெடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று பொதுமக்களை நம்பவைக்க தவறிவிட்டது” என இதற்கு காரணம் கூறியுள்ளார்.