பாதுகாப்பு குறைபாடு இருந்தது

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி சென்றார். அவர் செல்லும் பாதையில் விவசாயிகள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் திட்டமிட்ட ரீதியில் திடீரென மறியல் செய்தனர். இதனால், மேம்பாலம் ஒன்றில் பிரதமரின் வாகனம் 20 நிமிடங்கள் நின்றது. இதையடுத்து பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இதற்கு பஞ்சாபில் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க, பிரதமருக்கு எதிராக மிக மோசமான சதி செய்யப்பட்டுள்ளது என கூறியது. இதை அப்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மறுத்தார். பாகிஸ்தானையொட்டிய எல்லைப்பகுதி அது என்பது நினைவு கூரத்தக்கது. இந்த சம்பவத்தில் குற்ற சதி எதுவும் உள்ளதா, இதில் பஞ்சாப் காவல்துறையின் பங்கு குறித்து விசாரணை நடத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிந்து மல்கோத்ரா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், “பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் தேவையான நடவடிக்கை எடுக்க பெரோஸ்பூர் சீனியர் எஸ்.பி தவறிவிட்டார். பிரதமரின் பயணப் பாதை குறித்து 2 மணி நேரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேவையான காவல் படையினர் இருந்தும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அவர் தவறிவிட்டார்’’ என்று கூறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவதாகவும், அதன்பின் தேவையான நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார்.