கடைக்கோடி மனிதர்களின் மனதில் தெய்வீகத்தை விதைத்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். நாம் சிந்திக்க வேண்டிய வார்த்தைகள் அவரால் நகைச்சுவையாக வெளிப்படுத்தப்பட்டன. உண்மையில் 64 வது நாயனாராக இருந்தார் என்பதே ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை.
#கிருபானந்த_வாரியார் 1906 ஆம் ஆண்டு வேலூருக்கு அருகிலுள்ள காங்கேயநல்லூரில் மல்லையா தாஸ் பாகவதர் மற்றும் கனகவல்லி அம்மையாருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு உடன்பிறப்புகள் பதினொரு பேர் இருந்தனர்.
#கிருபானந்த_வாரியார் அவர்களின் தந்தையே அவருக்கு அறிவையும் ஞானத்தையும் பயிற்றுவித்தார். இலக்கியம், இலக்கணம், இசை ஆகியவற்றை வீட்டிலேயே அவருக்குக் கற்றுக் கொடுத்தார். வாரியார் பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதிலேயே கவிதைகளை “வெண்பா” பாணியில் எழுதும் திறமை பெற்றார். அவர் தனது 12வது வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார், தன் இறுதி வரை எந்தப் பாடலும் மறக்கவில்லை.
#கிருபானந்த_வாரியார் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை, அவர் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆனால் பெற்ற பட்டங்கள் ஏராளம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தஞ்சாவூர் பல்கலைக் கழகம் அவருக்கு இலக்கிய முத்து முனைவர் என்று பெயரிட்டது. காஞ்சி மடத்தின் மகா பெரியவர் இவரை சரஸ்வதி கடாக்ஷாமிர்தம் என்று போற்றினார். அனைவரும் அருள்மொழி அரசு என அவரை வாழ்த்தினர்.
#கிருபானந்த_வாரியார் அவர்கள் தன் சிறுவயதில், தினமும் பாலாற்றில் குளிப்பதற்குச் செல்வார். அவ்வாறு செல்லும் போது தனது தாயிடம் இருந்து சோறு எடுத்துச் சென்று எறும்பு புத்து உள்ள இடங்களைப் பார்த்து உணவளிப்பார்.
#கிருபானந்த_வாரியார் அவர்களின் தந்தைக்கு தன் மகன் ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்யப் பல இடங்களுக்குச் சென்றுது முதலில் தெரியாது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவிலுக்கு ராஜகோபுரம் (கோயில் கோபுரம்) கட்டி முடிக்க அவரது தந்தை வாங்கிய 5,000 ரூபாய் கடனை வாரியார் செலுத்திய பிறகு தான் அப்பாவுக்குத் தெரிந்து பின் வாரியாரை பாராட்டினார்.
#கிருபானந்த_வாரியார் சுவாமிகள் வீர சைவ சமூகத்தைச் சேர்ந்தவர், அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது சிவலிங்கத்தை கழுத்தில் அணிந்தார். 1936 ஆம் ஆண்டு முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பிறகே உணவு எடுத்து வந்தார்.
#கிருபானந்தவாரியார் தனது 19வது வயதில், தன் மாமாவின் மகளான அமிர்த லட்சுமியை திருமணம் செய்து கொண்டார் இருந்தும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்ததின் காரணமாக அவருக்கு குழந்தைகள்(வாரிசு) இல்லை. தியாகராஜ பாகவதர் நாயகனாக நடித்த படம் “சிவகவி”, அந்த படத்துக்கு வசனம் எழுதியவர் #கிருபானந்தவாரியார். மற்றொரு சிறப்பு அந்த படம் திரையில் ஓராண்டுக்கு மேல் ஓடியது.
#கிருபானந்தவாரியார் தன் வெளியூர் பயணத்தின் போது கூட பூஜை பெட்டியை உடன் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 57 ஆண்டுகள் தொடர்ந்து பூஜை செய்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் பல பட்டங்களை வைத்திருந்தாலும், பலரும் பயன்படுத்திய பட்டம் பொன் மன செம்மல் (அதாவது “பொன் இதயம் கொண்ட உன்னத மனிதர்”). எம்.ஜி.ஆருக்கு அந்த பட்டம் #கிருபானந்தவாரியார் அவர்களால் வழங்கப்பட்டது.
#கிருபானந்த_வாரியார் அவர்கள் திருப்புகழ், மகாபாரதம், கம்ப ராமாயணம், கந்த புராணம், பெரிய புராணம் போன்றவற்றில் சுமார் 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றையெல்லாம் படித்தால் வாரியரின் சொற்பொழிவைக் கேட்ட உணர்வை தருகின்றது.
#கிருபானந்த_வாரியார் அவர்கள் நன்கொடைகள் மூலம் (சுமார் 60,000 அமெரிக்க டாலர்கள்) 27 லட்சம் ரூபாய் திரட்டி திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ணா இல்லத்தை அமைத்தார். இப்போது அந்த இடம் ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் இடமாக உள்ளது. அவர் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். அப்பள்ளிகளுக்கு எல்லா விதமான உதவியும் செய்துள்ளார்.
#கிருபானந்த_வாரியார் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தி, ஏழை மக்கள், மாணவர்கள், விதவைகள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக “வாரியர் பொது சேவை நிதி அறக்கட்டளை” ஒன்றை உருவாக்கினார். சொற்பொழிவுகளின் போது, தன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து புத்தகங்கள் வழங்கி ஊக்கப்படுத்துவதை வாரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழில் இலக்கியச் சொற்பொழிவுகள் இழிவாகப் பார்க்கப்பட்ட நேரத்தில், ஸ்ரீ கிருபானந்த வாரியார் அவர்கள் அதற்கு ஒரு புதிய பரிமாணம் தந்து, “பக்தி” தான் தமிழ் மரபுகளின் முக்கிய வேர் என்பதை நிரூபித்தார். மென்மையான பேச்சும் அடக்கமும் கொண்ட அவர் எப்போதும் ஒரு மாணவரைப் போல் “கற்றலை” தன் இறுதிவரை தொடர்ந்தார்.
– sundar