ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரனுக்கு உதவியாளராக இருக்கும் பங்கஜ் மிஸ்ரா உட்பட ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான வேறு சிலரும் சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு, சுங்கச்சாவடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு, சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழலிலும் தொடர்பு உள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அமலாக்கத் துறையினர், இவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 13.32 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டிலிருந்து இரண்டு ஏ.கே., 47 துப்பாக்கிகளையும், 60 குண்டுகளையும் அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான புகாரில் முதல்வர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் கமிஷன் பரிந்து செய்துள்ளது. எனவே, இந்த பரிந்துரை மூலம் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ விரைவில் பதவி பறிக்கப்பட உள்ளது. இதனிடையே, ஹேமந்த் சோரன் தனது மனைவியை முதல்வராக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.