தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்ட தலைவர் மருத்துவர் சர்வகட்சி சரவணனின் உதவியாளர் சுந்தரிடம் அவனியாபுரம் காவல்துறையினர், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் மதுரை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் மருத்துவர் சரவணன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பா.ஜ.க மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின் பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பா.ஜ.கவின் முன்னாள் மாவட்ட தலைவர், மகளிர் அணி தலைவி என 10 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்று நள்ளிரவே சரவணன் பி.டி.ஆரை சந்தித்து பா.ஜ.கவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. சரவணனை கைது செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் பா.ஜ.க சார்பில் புகாரளிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.