ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மவுண்ட் கார்மல் உயர்நிலைப் பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம், அதன் மாணவர்கள் தங்கள் நெற்றியில், விபூதி, திலகம், பொட்டு வைப்பதற்காகவும், பெண்கள் வளையல் அணிவதற்காகவும் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இந்த தொடர் துன்புறுத்தல்களால் பள்ளி மாணவர்கள் 36 பேர் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ‘ஹிந்து நகரா’ என்ற மாத இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கிறிஸ்தவர் அல்லாத குழந்தைகளை காலை, மாலை மற்றும் மதிய உணவு நேரங்களில் பைபிள் வாசிப்பு வகுப்புகள் மற்றும் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை கட்டாயமாக நடத்துவதன் மூலம் கிறிஸ்தவ நம்பிக்கைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. பள்ளியின் அனைத்து வகுப்பறைகளின் சுவர்களிலும் இயேசு கிறிஸ்துவின் உருவம் வரையப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் வெளிநாட்டினரை அடிக்கடி பள்ளிக்கு வரவழைத்து அவர்களை மாணவர்களுடன் உரையாடவைத்து மதமாற்றம் செய்து வருகிறது. இந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் சுவிசேஷ தொண்டு நிறுவனங்களுக்காக பணிபுரியும் மிஷனரிகள்’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே, ‘அரசின் 25 மற்றும் 28(3) விதிகளை மவுண்ட் கார்மல் பள்ளி மீறுகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு, கல்வி உரிமைச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கான விதிமுறைகள் என பலவற்றை மீறியுள்ளதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சட்ட உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.