அந்த காலம் முதல் இன்றுவரை எந்த காலகட்டத்திலும் மக்களின் பாதுகாப்பான சிறந்த முதலீட்டு தேர்வுகளில் தங்கமும் ஒன்று. சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் தற்போது நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கும் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், ரிசர்வ் வங்கி வெளியிடும் ‘சவரின் கோல்ட் பாண்ட்’ எனப்படும் டிஜிட்டல் தங்கப் பத்திர தொகுப்பின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது சீரிஸ் நேற்று துவங்கியது. இது வரும் ஆகஸ்ட் 26 அன்று முடிவடையவுள்ளது. இதில், ஒரு கிராம் தங்கம் விலை 5,197 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் வழியாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க டீமேட் கணக்கு தேவைப்படும். இதைத்தவிர வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளின் டிஜிட்டல் தளத்தின் மூலமும் எளிதாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு தனி நபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். எனினும் வட்டி வருவாயில் டி.டி.எஸ் விதிக்கப்படுவதில்லை.