கேரளாவில் ஆளும் கட்சியினரான இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என வங்கியின் முன்னாள் ஊழியர் எம்.வி.சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு திருச்சூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வி.ஏ.உல்லாஸ் தாக்கல் செய்த பதில் அறிக்கையில், “கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 117 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு காவல்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் நடந்துவந்த இந்த மோசடிகள் குறித்த முழு விவரங்களையும் வெளிக்கொணர கூடுதல் அவகாசம் தேவை என கோரப்பட்டுள்ளது. இதுவரை 192 போலி கடன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று டெபாசிட்தாரர்களையும் வங்கியையும் ஏமாற்றியுள்ளனர். கடன் மோசடி தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கியின் முன்னாள் செயலாளர் சுனில் குமார், முன்னாள் மேலாளர் பிஜு, முன்னாள் கணக்காளர் கில்லெஸ், முன்னாள் தலைவர் திவாகரன் உட்பட 18 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. 6 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.