நேதாஜியின் அஸ்தியை கொண்டுவர வேண்டும்

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மரணம் குறித்த சந்தேகம் தற்போது வரை நீடித்து வருகிறது. 1945 ஆகஸ்ட் 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்தார் என்று கூறப்பட்டாலும், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில், அவரது ஒரே மகளான அனிதா போஸ், “டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தியை பாரதம் கொண்டுவந்து மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் என் தந்தையின் மரணம் குறித்து இன்னும் சந்தேகம் உள்ளவர்களுக்கு உண்மையான விவரம் தெரியவரும். என் தந்தைக்கு நம் நாட்டின் சுதந்திரத்தை விட அவரது வாழ்க்கையில் எதுவும் முக்கியமாக இருந்ததில்லை. அன்னிய ஆட்சி இல்லாத பாரதத்தில் வாழ அவர் ஏங்கினார். ஆனால், சுதந்திரத்தின் மகிழ்ச்சியை அவரால் அனுபவிக்க முடியவில்லை. அதனால், குறைந்தபட்சம் அவரது அஸ்தியையாவது பாரத மண்ணுக்கு எடுத்து வர வேண்டிய நேரம் இது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து, அவரது அஸ்தியை பாரதம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.