ஒண்டி வீரன் தபால்தலை வெளியிடப்படும்

தேசத்தின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு தேசியக் கொடிகளை மத்திய அமைச்சர் எல். முருகன் விநியோகம் செய்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அரங்கை திறந்து வைத்த அமைச்சர், தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ‘இந்தியப் பிரிவினையின் தாக்கம்’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியும் திறந்து வைத்துப் பார்வையிட்டார். இதில் பேசிய அவர், “பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்களில் மூவர்ணக்கொடியை ஏற்றி பெருமைபடுத்தி ஆதரவளித்து வருகின்றனர். தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், கொடி காத்தக் குமரன் என எண்ணற்றோர் நாட்டின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். மேலும் வ.உ.சி 150வது பிறந்த தினம், பாரதியார் நூற்றாண்டு விழா போன்றவற்றைக் கொண்டாடி வருகின்றோம். தமிழகத்தில் 1,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராளிகள் இருந்தனர். அதில் 200க்கும் மேற்பட்டோர் அறியப்படாத வீரர்களாக உள்ளனர். அப்படி நாடுமுழுவதும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்  ‘சுராஜ்’ என்ற பெயரில் நெடுந்தொடர் தூர்தர்ஷனில் தொடர்ந்து 75 எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது. அறியப்படாத வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20ம் தேதி பாளையங்கோட்டையில் அவரது தபால்தலை வெளியிடப்படவுள்ளது” என தெரிவித்தார்.