பிரதமர் மோடி சுதந்திர தின உரை

டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் மோடி, “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள். இந்த சுதந்திர தினத்தை பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பாரத தேசத்தினர் கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி பறக்கிறது. நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களின் உணர்வை தெரிவித்துள்ளனர். இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். விடுதலை போராட்ட வீரர்களின் நினைவை போற்றுவோம். அவர்களின் கனவை நிறைவேற்றும் நேரம் இது. தியாகங்கள் நமது தேசபற்றை வளர்க்கிறது.

நினைவு கூர்வோம்

இந்த நேரத்தி, மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், சியாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, அம்பேத்கர், லோகியோ ராஜாஜி, பகத்சிங், ராஜ்குரு, ஜெய்பிரகாஷ் நாராயணன், மங்கள் பாண்டே, நேதாஜி, ராணி வேலுநாச்சியார், பாரதியார், பழங்குடியின விடுதலை வீரர் பிர்சா முண்டா உள்ளிட்ட அனைவரையும் நாம் நினைவு கூர்வோம். சுதந்திரத்திற்காக அஹிம்சை, ஆயுதம், அரசியல் சாசனம் கொண்டு அவர்கள் போராடினார்கள். ரவீந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் போன்றோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்களை வெளியேற்றினால் பொருளாதாரம் பின்னோக்கி சென்று விடும் என்று சிலர் கூறினார்கள். ஆனால் இன்று பாரதம் வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரே ஒரு நாள் கூட தங்கள் வாழ்வில் கொடுமைகளை அனுபவிக்காமல் இருந்ததில்லை. இன்று அவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நாள். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வையை அவர்களின் பாரதத்துக்கான கனவை நாம் இன்று நினைவுகூர வேண்டும். அவர்களை சில காலம் தேசம் மறந்துவிட்டது. நாம் இப்போது அவர்களுக்கான உரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

சாதனை படைத்த பாரதம்

வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது தேசத்தின் பலம். பன்முகத்தன்மை, பல மொழிகள் கொண்டது பாரதம். பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு முன்னேறிக்கொண்டுள்ளது நமது தேசம். அனைவருக்கும் மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனநயாகத்தின் தாய் என்பதை பாரதம் உறுதி செய்துள்ளது. 75 ஆண்டுகளாக நாம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறோம். மக்களுக்கு அதிகாரம் வழங்கும் பணியை செய்து வருகிறோம். கடைசி மனிதனுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. நாட்டில் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. நல்ல தீர்வுகளை வழங்கும் பாரதத்தை உலகம் உற்று நோக்குகிறது. கொரோனாவை நாம் சிறந்த முறையில் எதிர்கொண்டோம். 200 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர். நமது நாட்டை கண்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

ஊழலும், வாரிசு அரசியலும் சவால்கள்

ஊழலும், வாரிசு அரசியலும் தான் பாரதம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது. இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால்; தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்.

பாரம்பரியம் கலாசாரம் காத்திட வேண்டும்

நாட்டின் வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்கெடுக்க விரும்புகின்றனர். உயர்ந்த சிந்தனைகளுடன் தொலைநோக்கு திட்டங்களுடன் தேசம் பயணிக்க வேண்டும். வரும் 100வது ஆண்டில் பாரதம் அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகள் பாரதத்துக்கு மிக முக்கியமானது. இதற்கு நாம் ஒரு நொடியை வீணாக்கக்கூடாது. பாரதத்தை பலர் சந்தேகிக்கின்றனர். ஆனால், இந்த நிலத்தின் சிறப்பு அவர்களுக்கு தெரியாது. நாட்டை முன்னேற்றுவோம். ஒருங்கிணைந்த உணர்வு தான் பாரதத்தின் பலம். நாம் நமது பாரம்பரியம் கலாசாரத்தை காத்திட வேண்டும். இந்த உலகத்திற்கு வழங்கிட நம்மிடம் ஏராளம் உள்ளது. நாம் வளர உலகம் வளரும்.

5 உறுதிமொழிகள்

நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு பாரதத்தை வளர்ந்த தேசமாக்கும். இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் நாம் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. பொதுமக்களுக்கும், முதல்வர்களுக்கும், பிரதமருக்கும்கூட கடமைகள் உள்ளது. இந்த 5 உறுதிமொழிகளையும் ஏற்று நாட்டு மக்கள் பின்பற்றினால் பாரதத்தை இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும். அப்போதுதான் நம் விடுதலை போராட்ட வீரர்களின் கனவுகள் நிறைவேறும். இதற்கு என்னோடு சேர்ந்து அனைவரும் இதற்கு உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு அதிகாரம்

பெண்கள் குறித்த மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நமது கனவுகள் மேலும் வளரும். பெண்களின் முன்னேற்றம் மிக அவசியமானது. அவர்களுக்கு நாம் உரிய மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பாலின சமத்துவம் முக்கியம். ஒவ்வொரு கிராமமும் இணையத்தால் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் 5 ஜி சேவையையும் நாம் பெறவுள்ளோம். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணித்து வருகிறோம். கல்வி, விவசாயத்தில் டிஜிட்டல் புரட்சி வரும். ஜெய்ஹிந்த்” என உரையாற்றினார்.