காஷ்மீரில் வியத்தகு மாற்றம்

ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவு 370’ஐ நீகிய பிறகு அங்கு வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மற்ற மாநிலங்களுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரும் வளர்ச்சி பெற்று வருகிறது. அவ்வகையில், ஜம்மு காஷ்மீரின் இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் ‘திரங்கா ஷிகாரா’  என்ற பேரணியை ஏற்பாடு செய்தது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா மற்றும் வீடுகள்தோறும் தேசியக்கொடி என்ற பிரச்சாரத்தின் கீழ் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பல்வேறு துறைகள் மற்றும் பள்ளிகளால் பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பெண்கள் இந்த முயற்சிக்கு பெரிதும் பங்களிக்கின்றனர். இதேபோல பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டபுல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹம்தானியா மிஷன் உயர்நிலைப் பள்ளி பாம்பூர் நடத்திய ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’’ பிரச்சாரத்தின் கீழ் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள திரிகஞ்சன் மற்றும் பெர்னேட் ஆகிய தொலைதூர கிராமங்களில் இந்திய இராணுவத்தால் நிறுவப்பட்ட சுயஉதவி குழுக்களின் பெண்கள், தேசியக் கொடிகளை தைத்துத் தருகின்றனர். காஷ்மீர் பெண்களின் இந்த முயற்சி ஒவ்வொரு வீட்டுக்கும் தேசியக் கொடியை கொண்டுசேர்க்க உதவும். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, புகழ்பெற்ற ஸ்ரீநகர் லால் சௌக்கில் இருந்து ‘தி கிரேட் இந்தியா ரன்’ நிகழ்ச்சியை ஆளுநர் மனோஜ் சின்ஹா துவக்கி வைத்தார்.