பாரத சுதந்திரப் போராட்ட வீரர்களில் குறிப்பிட்டு கூறத்தக்கவர்களில் ஒருவர் தாதாபாய் நவ்ரோஜி. இவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்தவர். பாரதத்தின் முதுபெரும் கிழவர் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் தெற்கு லண்டனில் 8 ஆண்டு காலம் வாழ்ந்த வீடு தற்போது நீலப்பலகையுடன் (‘புளூ பிளேக்’) கௌரவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்த நீலப்பலகை நினைவு கௌரவ திட்டம் என்பது, இங்கிலிஷ் ஹெரிடேஜ் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது லண்டனில் உள்ள முக்கிய கட்டடங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மதித்து போற்றி கௌரவிக்கிறது. அவ்வகையில்தான், இந்த ஆண்டு சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவையொட்டி, தாதாபாய் நவ்ரோஜியின் லண்டன் இல்லம் நீலப்பலகையுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. தாதாபாய் நவ்ரோஜியின் சிவப்பு செங்கல் வீட்டில் இப்போது ‘ தாதாபாய் நவ்ரோஜி (1825-1917), இந்திய தேசியவாதி மற்றும் எம்.பி. இங்கு வாழ்ந்தார்’ என நீலப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இங்கிலிஷ் ஹெரிடேஜ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “நவ்ரோஜி இங்கிலாந்துக்கு 7 பயணங்களை மேற்கொண்டார், லண்டனில் தனது நீண்ட ஆயுளில் 30 வருடங்களுக்கு மேலாக கழித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.