மகரிஷி அரவிந்தரின் 150வது பிறந்தநாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மகரிஷி அரவிந்தரின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களை நினைவுகூறும் விதமாக, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 75 சிறைச்சாலைகளில், 12 ஆகஸ்ட் முதல் 15 ஆகஸ்ட் 2022 வரை ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் மகரிஷி அரவிந்தரின் தத்துவங்களை எடுத்துக்கூறுவதுடன், யோகா மற்றும் தியான பயிற்சிகள் வாயிலாக சிறைவாசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். சுயசிந்தனைகள் மற்றும் தவறுகளை உணர்வதன் வாயிலாக சிறைவாசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்த பிரதமர் நரேந்திரமோடி, சிறைவாசிகள் புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்க ஏதுவாக, நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மகரிஷி அரவிந்தரின் வாழ்க்கை குறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார். இதன்படி, சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய நாட்டில் உள்ள 75 சிறைச்சாலைகளை மத்திய கலாச்சாரத்துறை அடையாளம் கண்டு அங்கு முன்னணி ஆன்மீக தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ராமகிருஷ்ணா மிஷன், பதஞ்சலி, வாழும்கலை, ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்சங்க அறக்கட்டளை உள்ளிட்ட 5 அமைப்புகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.