ரக்ஷா பந்தன் கோயில்

பாரதத்தில், எண்ணற்ற தனித்துவமான ஹிந்து கோயில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல ரகசியங்கள், வரலாறுகள், புராண இதிகாச தொடர்புகள், சுவாரசியங்கள் உள்ளன. அதேபோல் உத்தராகண்டிலும் அப்படி ஒரு கோவில் உள்ளது. ஹிந்துக்களின் பண்டிகையான ரக்ஷா பந்தன் அன்று மட்டுமே அந்த கோயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் அக்கோயில் மூடப்பட்டிருக்கும். உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஊர்கம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பன்சி நாராயண் கோயில் என்ர கிருஷ்ணரின் கோயிலில்தான் இந்த அரிய நிகழ்வு நடக்கிறது. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.

மஹாபலி மன்னன் உலகம் முழுவதையும் ஆண்டபோது மக்களை துன்புறுத்தியதையும் பகவான் விஷ்ணு வாமன ரூபம் எடுத்து வந்து மக்களை காத்த கதையையும் நாம் அறிவோம். தன் தலையில் 3வது அடியை எடுத்து வைக்கும் வாமன அவதாரம் கடவுள் விஷ்ணு என்பதை அறிந்த மஹாபலி சக்ரவர்த்தி, இறைவனிடம் தனது ராஜ்யத்தைப் பாதுகாக்க வேண்டினார். இதற்காக விஷ்ணு தனது விஷ்ணு லோகத்தையும் லட்சுமி தேவியையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இருப்பினும், கொடுத்த வாக்கிற்காக விஷ்ணு அந்த பணியை மேற்கொண்டார்.

இதனால் வருத்தமடைந்த லட்சுமி தேவி, பாதாளத்தில் உள்ள மஹாபலி மன்னனின் ராஜ்யத்திற்கு வந்தாள். ஷ்ரவண பூர்ணிமா அன்று மன்னரின் கையில் ஒரு ராட்சையை கட்டினாள். மஹாபலி லட்சிமியின் விருப்பத்தை கேட்க, மகாவிஷ்ணு தனது இருப்பிட்த்திற்குத் திரும்பவேண்டும் என கோரிக்கை வைக்கிறார். பலி சக்ரவர்த்தியும் அதனை ஏற்கிறார். அப்போது நாராயண பகவான் பாதாள லோகத்திலிருந்து வெளிப்பட்ட இடமாகவே இந்த பன்சி நாராயண் கோயில் கருதப்படுகிறது. எனவே, ரக்ஷா பந்தன் தினத்தன்று மட்டுமே இங்கு மனிதர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. இக்கோயிலில் அழகிய நாராயணனுடன் இணைந்து சிவன், விநாயகப் பெருமான், வன தேவதைகளின் மூர்த்தங்களும் அருள் பாலிக்கின்றன.