பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் பிரதமராக பதவியேற்றது முதல், ஆண்டுதோறும் தன் சொத்து விபரங்களை வெளியிட்டு வருகிறார். அனைத்து அமைச்சர்களையும் வெளியிடும்படி கூறியுள்ளார். இதன்படி, பிரதமர் மோடியின் கடந்த நிதியாண்டுக்கான சொத்துப் பட்டியல், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மோடியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு, 26.13 லட்சம் ரூபாய் உயர்ந்து, 2.23 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பெரும்பாலானவை வங்கி முதலீடுகள். அவர், பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யவில்லை. அவருக்கு சொந்தமாக வாகனம் ஏதுமில்லை. 1.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு மோதிரங்கள் உள்ளன. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தை மூன்று பேருடன் சேர்ந்து, 2002ல் மோடி வாங்கியிருந்தார். தற்போது அந்த நிலத்தையும் தானமாக வழங்கியுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.