12 பிரிவினைவாத நூல்களுக்கு தடை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பாடதிட்டத்தில், உலகிலுள்ள முஸ்லிம் நாடுகளின் அறிஞர்கள், கல்வியாளர்கள் எழுதிய பல நூல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மவுலானா அப்துல் அலா மவுதூதி, எகிப்து நாட்டின் சையத் குதுப் ஆகியோர் எழுதிய 12 நூல்களுக்கு அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக இஸ்லாமிய கல்வித்துறை தலைவர் பேராசிரியர் முகம்மது இஸ்மாயில், “மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகியோரின் நூல்களுக்கு தடை விதித்துள்ளோம். இருவரும் பயங்கரவாதத்தை போதிப்பதாக தொடர் புகார்கள் வந்தன. சர்ச்சைகள் கிளம்புவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார். தடை செய்யப்பட்ட இந்நூல்களில் முஸ்லிம்களுக்கு தனி நாடு அமைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே தங்களது சொந்த நாட்டை எதிர்த்து எழுதியவர்கள். இதன் காரணமாக, இருவருமே அந்த நாடுகளின் அரசுகளால் தண்டிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள். இருவரின் நூல்களும் பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இவற்றுக்கு தடை விதித்துள்ளபோதிலும், இந்நூல்கள் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஹம்தர் பல்கலைக் கழகங்கள், ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இன்னமும் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாடு முழுவதிலுமுள்ள மேலும் பல சிறுபான்மைக் கல்லூரிகளின் இஸ்லாமிய கல்விப் பிரிவுகளிலும் போதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.