நாசா நிறுவனத்தில் பணி செய்ய வேண்டும் என்பது உலகின் பல நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வாளர்களின் கனவு. அவ்வகையில் பாரதத்தை சேர்ந்த இளம்பெண் அதிரா தற்போது நாசாவில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் பாரத வம்சாவளியினரான கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர்களை அடுத்து விண்வெளிக்குச் செல்லும் மூன்றாவது பாரதப் பெண்மணி என்ற பெருமையை விரைவில் பெற உள்ளார். கேரளாவை சேர்ந்த அதிரா ப்ரீத்தா ராணி, பள்ளியில் படிக்கும்போதே விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள வானியல் சம்பந்தமான வகுப்புகளில் கலந்துகொண்டார். படிக்கும்போதே வேலை செய்து தனது குடும்பத்தினருக்கு பாரம் இல்லாமல் இருந்த அதிரா, கனடாவில் உள்ள ஒட்டாவாவில் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். விண்வெளி சம்பந்தமான படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் முடித்த சமயத்தில் அதிராவுக்கு திருமணம் நடந்தது. அவருடைய கணவரும் அதிராவின் விண்வெளி கனவுக்கு ஆதரவாக இருந்தார். தனது கணவருடன் இணைந்து ‘எக்ஸோ ஜியோ ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய அதிரா, பல்வேறு விண்வெளி வீரர்களின் பயிற்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு நாசா, சர்வதேச விண்வெளி அறிவியல் நிறுவனம் நடத்திய விண்வெளி வீரர் பயிற்சி திட்டம் குறித்து தெரிய வந்தது. அதில் இணைந்த அவர் பல்வேறு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்து தற்போது அவர் நாசாவில் பணிபுரியும் வாய்ப்பினை பெற்றுள்ளார். சந்திரனில் உள்ள விண்வெளி வீரர்களை பாதுகாக்க நாசா பரிசோதனை செய்துவரும் நிலையில் அதில் ஒரு நபராக அதிரா தேர்வாகியுள்ளார். தேவையான பயிற்சிகளை முடித்ததும் அதிரா விண்வெளிக்கு செல்வார்.