சிறுவனின் மகத்தான சாதனை

ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயா ஜாகர் என்ற 12 வயது  ஜாஜர் சிறுவன், கொரோனா தொற்று பொதுமுடக்கத்தின்போது, தனது ஆன்லைன் வகுப்புகளுக்கு சுமார் 10 ஆயிரம் செலவு செய்து அலைபேசி ஒன்றை வாங்கினான். ஒரு விவசாயியின் மகனான அந்த சிறுவன், வயது என்பது வெறும் எண் மட்டுமே, சாதிக்க வயது முக்கியமில்லை என நிரூபிக்கும் வகையில், தற்போது யூடியூப் மூலம் மூன்று கற்றல் செயலிகளை உருவாக்கி, உலகின் ‘இளைய ஆப் டெவலப்பர்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளான். மேலும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளான்.

அதுமட்டுமின்றி, ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 8ம் வகுப்பு படிக்கும் கார்த்திகேயா ஜாகரின் திறமையையால் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றான். அந்த பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உதவித் தொகையையும் வென்றுள்ளான். தற்போது, ஹார்வர்ட் ​​பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து வருகிறான்.

இதுகுறித்து ஜாகர் கூறுகையில், “செயலிகளை தயாரிக்க முதலில், குறியீட்டு செயல்பாட்டிற்கு அலைபேசியை பயன்படுத்தியபோது பல சிக்கல்களை எதிர்கொண்டேன். இருப்பினும் விடாமுயற்சியுடன் யூடியூப் வீடியோக்களை பார்த்து முயற்சித்து சமாளித்தேன். அதேசமயம் எனது படிப்பையும் தொடர்ந்தேன்” என கூறினான்.

ஜாகர், உருவாக்கியுள்ள மூன்று அலைபேசி செயலிகளில் ஒன்று பொது அறிவுக்கான லூசண்ட் ஜி.கே. ஆன்லைன். இரண்டாவதாக ராம் கார்த்திக் கற்றல் மையம் எனப்படும் குறியீட்டு மற்றும் கிராஃபிக் டிசைனிங்கிற்கானது. மூன்றாவதாக, ஸ்ரீ ராம் கார்த்திக் டிஜிட்டல் கல்வி செயலி. இந்த செயலி தற்போது 45,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

ஒரு தனியார் ஊடகத்திடம் தனது சாதனை குறித்து கார்த்திகேயா பேசுகையில், “பிரதமர் மோடியின் டிஜிட்டல் பாரதம் பிரச்சாரத்தில் இருந்து எனக்கு உத்வேகம் கிடைத்தது. நானும் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளான்.

“என் மகன் மேலும் பல அலைபேசி செயலிகளை உருவாக்கி வளர உதவுமாறு நான் அரசை கேட்டுக்கொள்கிறேன். அவன் மிகவும் திறமையானவன். அவன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அவனது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோரும் கார்த்திகேயா ஜாகரை சந்தித்து பேசி அவனது சாதனைகளை பாராட்டி ஊக்கப்படுத்தினர்.