போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விஸ்வ சங்க சிக்ஷா வர்க’ நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், “நமது தேசத்தின் இருப்பின் நோக்கம் தர்மத்தை உலகுக்கு வழங்குவதே. உலக நலனை விரும்பிய முனிவர்களின் உறுதியால்தான் நம் தேசம் பிறந்தது. பாரதம் தன் சுயநலத்திற்காக வாழாமல் உலகத்துக்காக வாழ வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். பாரத கலாசாரத்தின் சிறப்பை அங்குள்ள மக்களுக்கு வழங்குவது வெளிநாடு வாழ் ஹிந்துக்களின் பொறுப்பு.
வாசுதேவ், செல்லுலார் சிறையில் என்னிடம் ‘சனாதன தர்மம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். ஆனால், சனாதன தர்மத்தின் எழுச்சிக்கான முன்நிபந்தனை என்னவென்றால், ஹிந்து ராஷ்டிரத்தை அதாவது ஹிந்துஸ்தானை உயர்த்துவதுதான்’ என்று என்னிடம் கூறினார் என மகரிஷி அரவிந்தர் கூறியுள்ளார். ஆனால் மகரிஷி அரவிந்தர் இப்படிக் கூறிய அக்காலகட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்படப் போகிறது என்றோ அதன் ஸ்வயம்சேவகர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று அங்கு ஹிந்துக் கலாச்சார விரிவாக்கத்திற்காகப் பாடுபடுவார்கள் என்றோ யாருக்கும் தெரியாது. அனைவரையும் ஒன்றிணைக்கும் உண்மையை நாம் கண்டுபிடித்துள்ளோம். முழு உலகமும் ஒன்றுதான். அனைத்து நாடுகளிலும் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுதான் நமது தர்மம்.
ஆர்.எஸ்.எஸ் நிறுவப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பை டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் கவனித்து வந்தார். அந்த கூட்டத்திற்கு மகாத்மா காந்தி தலைமை தாங்கினார். பின்னர் அவர் இரண்டு திட்டங்களை முன்வைத்தார். அதில், ஒன்று, பசுவதைத் தடை. இரண்டாவது, பாரதத்தின் பூரண சுதந்திரத்தை காங்கிரஸ் தனது இலக்காக அறிவிக்க வேண்டும் என்பது. மேலும், சுதந்திர பாரதம், உலக நாடுகளை மூலதனத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும் என்றும் அறிவிக்கப்பட வேண்டும் என்றார். டாக்டர்ஜியின் இந்த பார்வை மிகப்பரந்ததாக இருந்தது.
1992ம் ஆண்டு பெங்களூரில் முதன்முதலாக ‘விஸ்வ சங்க சிக்ஷா’ வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது கன்வீனர் லட்சுமண ராவ் பிடே தனது தொடக்க உரையில், ‘இந்த இளம் தலைமுறையினர் சங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் சமூகத்தை எழுப்புவதற்கான இந்த செயல்முறைகளால் தங்கள் முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். பாரத குடிமக்கள் எங்கு வாழ்கிறார்களோ, அந்த நாட்டுக்கு அவர்கள் சேவை செய்கிறார்கள்’” என்று கூறியதை நினைவுகூர்ந்தார் டாக்டர் மோகன் பாகவத்.
கடந்த சில நாட்களாக போபாலில் நடைபெற்ற ‘விஸ்வ சங்க சிக்ஷா வர்க’வில் உலகம் முழுவதும் உள்ள ஹிந்து கலாசாரத்திற்காக உழைக்கும் பல்வேறு அமைப்புகளின் தன்னார்வலர்களும், மாத்ரிசக்தியின் ஷிக்ஷா வர்கா பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆண்கள் பிரிவில் 15 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் பயிற்சி பெற்றனர். பெண்கள் பிரிவில், 13 நாடுகளைச் சேர்ந்த 31 பெண்கள் பயிற்சி பெற்றனர்.