தம்பதியரைகொல்லமுயன்றதந்தை

ராஜஸ்தான்மாநிலம், பரத்பூரில் உள்ள கத்ரா பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பெண்ணான நக்மாவும் ஹிந்துவான நரேந்திரனும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மணமகன் ஹிந்து என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் அதனை ஏற்கவில்லை. இதனால், நக்மா நரேந்திரனுடன் ஓடிவிட்டார். பின்னர் இருவரும் கடந்த பிப்ரவரியில் ஆர்யசமாஜ் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் பரத்பூருக்கு திரும்பினர். நக்மாவின் தந்தை இஸ்லாம்கான், நரேந்திரன் தனது மகளைக் கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், சிலநாட்களுக்கு முன், மூன்றுமாத கர்ப்பிணியான நக்மா தனது கணவருடன் மருத்துவமனைக்குச் சென்றபோது இஸ்லாம்கான், தனது ஆட்டோவை வைத்து அவர்களது பைக்கை மோதி சாய்த்தார். கொல்லும் நோக்கில் அவர்கள்மீது ஆட்டோவை ஏற்ற முயன்றார். தம்பதிகள் இருவரும் தப்பியோடினர். அந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது. இதனிடையே, அங்கு மக்கள் திரண்டதால், காவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து இஸ்லாம்கான் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர் தலைமறைவானார். காவல்துறை விசாரணையின்போது நக்மா, ‘நான் கடத்தப்படவில்லை. இருவரும் விரும்பியே திருமணம் செய்தோம். அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தார் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர்’என தெரிவித்தார். காவல்துறை அவர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதுடன் தப்பியோடிய இஸ்லாம்கானையும் தேடி வருகிறது.