பாலில் ஊழல் பால் கவரில் ஊழல்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில், ஆவடியில் நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து செக்போஸ்ட் காமராஜர் சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பேரணி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இதுபோன்று தமிழகம் முழுவதும் பேரணி நடைபெறும். பிரதமர் மோடி வரும் 13 முதல் 15ம் தேதி வரை 3 நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப தமிழக பா.ஜ.க சுமார் 50 லட்சம் வீடுகளுக்கும் மேல் தேசியக் கொடியை கொண்டு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பிரதமரின் இந்த வேண்டுகோளை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக, தி.மு.க முன்னெக்க வேண்டும். ஆவின் பாலில் ஊழல், பாலை ஊற்றும் கவரில் ஊழல். இதை நான் மட்டும் கூறவில்லை. ஆவின் தொழிற்சங்கங்களும், பால் முகவர்களும் சொல்கிறார்கள். அமைச்சர் நாசர் அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளுடன் உள்ள அவர் இந்தப் பதவியில் நீடிப்பது அழகா? என்ற கேள்விக்கு அமைச்சர் நாசர் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.