1,034 கோடி ரூபாய் நிலமோசடி தொடர்பான வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவத், அவரது மனைவி வர்ஷா ராவத் உள்ளிட்டோர் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இதனை விசாரித்து வருகிறது. நிலமோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சஞ்சய் ராவத்தை 8ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நிலமோசடி வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை தொடர்ந்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வர்ஷா ராவத் ஆஜரானார். அவரிடம் நிலமோசடி மற்றும் அது தொடர்பான பணமோசடி வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் வர்ஷா ராவத்திற்கு சொந்தமான 11.15 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.