அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, “அசாம் மாநிலத்தின் வங்க தேசத்தையொட்டிய எல்லையோர மாவட்டங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. வங்க தேசம், நேபாளம் ஆகிய நாடுகளையொட்டிய எல்லைகளிலும் மேற்கு வங்க மாநிலத்தையொட்டிய எல்லை மாவட்டங்களிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தேசிய அளவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை வளர்ச்சி 12.5 விழுக்காடாக உள்ள நிலையில், எல்லை மாவட்டங்களில் இது 31.45 சதவீதமாக உள்ளது. இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று கேள்வி எழுப்புவதை விட, இப்பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அங்கு காவல்துறை விஞ்ஞானப்பூர்வமான புள்ளி விவரங்களை திரட்டி அதற்கேற்ப செயல்படும். அசாமின் எல்லையோர மாவட்டங்களில் ஐந்து பயங்கரவாத சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் புகலிடமாக அசாம் உருவெடுத்து வருகிறது” என கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை அசாம் மாநிலத்தில் தற்போது 35 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால், அவர்களை எவ்வாறு சிறுபான்மையினர் என்று அழைப்பது என கருத்து தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது. முன்னதாக அம்மாநிலத்தின் மோரிகவோன் மாவட்டத்தில் முப்தி முஸ்தபா என்பவர் நடத்திய மதராசா பள்ளியை இடித்து அங்கு படித்த 4 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் அம்மாநில அரசு சேர்த்துள்ளது. முப்தி முஸ்தபா, அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அசாம் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைகள் உறுதிபடுத்தியுள்ளன.