சர்வத்தேச நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான சோட்டா ஷகீலின் உறவினரான சலீம் குரேஷியை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), மும்பையில் கைது செய்துள்ளது. தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது நெட்வொர்க்கில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பிப்ரவரி 3ம் தேதி என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் இது மூன்றாவது கைது என்பது குறிப்பிடத்தக்கது. சோட்டா ஷகீல் பெயரை பயன்படுத்தி மிரட்டி பெரும் தொகையை பறிப்பதில் சலீம் முக்கியப்பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிதி பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும் தாவூத்தின் ‘டி’ நிறுவனத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, பாரதத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிம், இங்கு ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கினான். இங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குவதே இந்த பிரிவின் வேலை. ஏற்கனவே, தாவூத் இப்ராகிமும் சோட்டா ஷகீலும் பாகிஸ்தானில் இருந்து பாரத\த்தில் கலவரத்தைத் தூண்ட சதி செய்தது, கடத்தல், போதைப்பொருள் பயங்கரவாதம், போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம், பணமோசடி, சர்வதேச பயங்கரவாதிகள் மற்றும் ஜிஹாதி அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவது, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன.