ஆகஸ்ட் 3, 2022 அன்று, இந்தியக் கடற்படையின் ஐந்து பெண் அதிகாரிகள், கொண்ட குழு ஒன்று, வட அரேபியக் கடலில் முதல்முறையாக கடல்சார் உளவு மற்றும் கண்காணிப்புப் பணியை முடித்து திரும்பியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சகம் இதனை, “பெண்களின் சக்தியை, அதன் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் பணி” என்று குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தின் கேப்டனாக, மிஷன் கமாண்டர் லெப்டினன்ட் சி.டி.ஆர் ஆஞ்சல் ஷர்மா இருந்தார். அவரது குழுவில், துணை விமானிகளாக லெப்டினன்ட் ஷிவாங்கி மற்றும் லெப்டினன்ட் அபூர்வா கீத் மற்றும் தொழில்நுட்பம் சார் அதிகாரிகளாக லெப்டினன்ட் பூஜா பாண்டா மற்றும் எஸ்.எல்.டி பூஜா ஷெகாவத் ஆகியோர் செயல்பட்டனர். குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள இந்திய கடற்படையின் ஏர் என்கிளேவ் ஐ.என்.ஏ.எஸ் 314’ன் பெண் அதிகாரிகளான இவர்கள் அதிநவீன டோர்னியர் 228 விமானத்தில் பறந்து இந்த பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதற்காக இவர்கள் பல மாதங்கள் கடுமையான பயிற்சிகளை பெற்றனர். இந்த படைப்பிரிவுக்கு ஒரு தகுதிவாய்ந்த ஊடுருவல் பயிற்றுவிப்பாளரான கமாண்டர் எஸ்.கே கோயல் தலைமை தாங்கினார்.