2ஜி அலைக்கற்றை வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசா மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ வழக்கு தொடர்ந்திருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணையின்போது, ‘தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும்’ என்று மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அப்படி, தினசரி விசாரணைகள் அனுமதிக்க முடியாதபட்சத்தில், அதற்காக சிறப்பு நீதிபதிகள் அமர்வு அமைக்குமாறு நீதிமன்றத்தை சி.பி.ஐ வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரங்கள் தேசிய மற்றும் சர்வதேச மாற்றங்களைக் கொண்டிருப்பதால், உடனடியாக இந்த மனுக்களை விசரிப்பது நன்மை பயக்கும் என்று வாதிட்டது. எனினும், சி.பி.ஐயின் இந்த விண்ணப்பத்திற்கு பதில் தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால், நீதிமன்றம் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மேல்முறையீடுகளை விசாரணைக்கு பட்டியலிடுவதாக தெரிவித்து விசாரனையை தள்ளி வைத்தது.