சுதந்திரம் 75, ஆசாதி கா அம்ரித் மோஹத்ஸ்வத்தை முன்னிட்டு ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’ என்ற பிரச்சாரம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் ஜம்மு காஷ்மீரில் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. அங்கு சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டங்களில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்குள்ள பொதுமக்கள், அரசியல்வாதிகள், ராணுவ வீரர்கள் என அனைவரும் பாரதம் மீது தங்களுக்கு உள்ள பாசத்தையும் தேசபக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் கூட்டாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் அனைத்திலும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் கொடிகளை ஏற்றி வருகின்றனர். மேலும் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் மற்றும் கிஷ்த்வாரில் உள்ள கோகிலா சௌக் போன்ற பல பொது இடங்களிலும் மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசி உயரப் பறக்கிறது. புல்வாமாவில், மாணவர்கள் கட்டுரை, ஓவியம், பாட்டுப் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்பகின்றனர். அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் முவர்ணக்கொடி பேரணிகளில் பங்கேற்றுள்ளதால் ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’ பிரச்சாரம் வேகம் பெற்றுள்ளது. “உள்ளூர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர், இந்த பிரச்சாரத்தில் அவர்கள் நேர்மறையான மனநிலையில் உள்ளனர்” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ராணுவத்தினரும் தங்களது இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.