வீடுகள் தோறும் தேசியக்கொடி இயக்கத்தை வலியுறுத்தி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஹுரியத் மாநாட்டு அலுவலக வாயிலில் ஜம்மு காஷ்மீர் நல்லிணக்க முன்னணியின் தலைவரும் காஷ்மீரி பண்டிட்டுமான சந்தீப் மாவா நமது தேசியக்கொடியை வைத்தார். இதுகுறித்து பேசிய சந்தீப் மாவா, வீடுகள் தோறும் தேசியக்கொடி பிரச்சாரத்தைப் பற்றி பேசிய, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடக கணக்குகளிலும் தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றி தேசியக் கொடியைக் கொண்டாடுவதற்கான கூட்டு இயக்கத்தைத் தொடங்கினார். நாட்டின் குடிமக்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை முன்னிட்டே இங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது” என கூறினார். எனினும் பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் அந்த கொடிகள் அகற்றப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சியை சேர்ந்த பல பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் சிறையில் இருப்பதால் அந்த அலுவலகத்தில் கடந்த 2019 ஆகஸ்ட் முதல் எந்த நடவடிக்கையும் இல்லை. ஹுரியத் மாநாட்டின் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக் 3 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.