சென்னை பாரிமுனை, பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவரான சிலை கடத்தல் நபரான இமானுவேல் பினிரோ, சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அந்த வீட்டில் தற்போது இமானுவேல் பினிரோவின் மனைவி பமீலா வசித்து வருகிறார். அந்த வீட்டில், பழமையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, அம்மன், சனீஸ்வரர் உட்பட ஒன்பது பழங்கால கோயில் சிலைகளை அவர்கள் கண்டுபிடித்தனர். சிலைகளுக்குரிய ஆவணங்கள் எதுவும் பமீலாவிடம் இல்லை. காவல்துறையினர், “இந்த சிலைகள், 300 ஆண்டுகள் பழமையானது. சிலைகளின் அடிப்பகுதியில், கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. இதனால் இவை திருட்டு சிலைகள் தான் என்பது தெரிகிறது. எநதெந்த கோயில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டன என விசாரித்து வருகிறோம். பமீலா, இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்தார். இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தனர்.