சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஜி.எஸ்.டி கவுன்சிலில் 56 பிரிந்துரைகளையும் ஏகமனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு 2 நாட்களாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிராண்டட் உணவு பொருள் மீதான வரி குறித்து தி.மு.கவினர் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். 2006ல் தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஜி.எஸ்.டி கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகள் பல பரிமாணங்களுக்கு பிறகு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014ல் கொண்டுவந்தது. ஜி.எஸ்.டி கொண்டுவந்ததும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் 14 சதவீதம் வருவாய் உயரும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. மத்திய அரசு தரப்பில் இருந்து தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை கடந்த மார்ச் வரை முற்றிலுமாக தரப்பட்டு விட்டது. எனினும், தமிழக நிதியமைச்சரின் அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி கூற முடியும்? மத்திய அரசு மீது பழிபோடுவதை தி.மு.க அரசு நிறுத்த வேண்டும். உத்தரப் பிதரேசம், குஜராத்தை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. அதன் விலைகளை மத்திய அரசு குறைக்கும் போது தமிழக அரசு குறைக்காமல் குறை கூறுவதை ஏற்க முடியாது. வாட் வரியை நிர்ணயிக்க மாநில அரசுக்குதான் உரிமை உண்டு” என்று கூறினார்.