டெல்லியில் ‘வேர்களுடன் இணைவோம்’ என்ற முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் (எம்.ஆர்.எம்) மாநாடு நடைபெற்றது. ஜூலை 23 அன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி தர்ஷனில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.ஆர்.எம் ஆர்வலர்கள் முன்னிலையில் இதற்கான பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. மேலும், எம்.ஆர்.எம் அமைப்பின் சார்பில், ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’ பிரச்சாரம் எம்.ஆர்.எம் புரவலர் மற்றும் வழிகாட்டியான இந்திரேஷ் குமார் மற்றும் ஆர்.டி.எம் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.என். பதான் உட்பட மற்ற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
இதில், பேராசிரியர் ரிஸ்வான் கான், அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் டீன் மற்றும் துறைத் தலைவர், கோஸ்வாமி சுஷில் முனிஜி, சுதிர் குப்தா, மண்ட்சௌர் உறுப்பினர் டாக்டர். ஷாஹித் அக்தர், எம்.ஆர்.எம். தேசிய கன்வீனர் முகமது அப்சல், ஏ.எம்.யு, காஷ்மீர் பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஜே.என்.யு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெண்கள் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வந்தவர்களும் கலந்து கொண்டனர். அன்றைய தினம் ராஜ்காட்டில் குறுகியதூர மூவர்ணக்கொடி யாத்திரையும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முஸ்லிம் அறிஞர் பெருமக்கள், “பாரதத்தை கலவரம் இல்லாத, அமைதியான நாடாக மாற்ற, மக்கள் தங்களின் பூர்வீக வேர்களை நினைவு கூர்ந்து, அவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணையுமாறு கற்றறிந்த பேச்சாளர்கள் பார்வையாளர்களை வலியுறுத்தினர். தங்களின் முன்னோர்கள் மற்றும் மரபுகள் அனைத்தும் சனாதன தர்மத்துடனும் பாரதத்துடனும் காலங்காலமாக இணைக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான பாரத முஸ்லிம்கள் ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தில் வேரூன்றியவர்கள்தான்” என்று கருத்துத் தெரிவித்தனர்.
இதில் பேசிய இந்திரேஷ் குமார், “நாம் அனைவரும் ஹிந்துஸ்தானிகளாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். நமது குணம் கறைபடாமல் இருப்பது அவசியம். ஆகஸ்ட் 1 முதல் 15 வரை தொடங்கப்படும் ‘வீடுதோறும் தேசியக்கொடி’ பிரச்சாரத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். நமது அடையாளம் நமது தேசத்துடன் தொடர்புடையது, நமது டி.என்.ஏ அனைத்தும் ஒன்றுதான். ஆனால் ஒவைசி போன்ற தலைவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளாமல் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். வெறுப்பு மற்றும் பிரிவினைவாத உணர்வுகளை புகுத்துகின்றனர். வன்முறை, வெறுப்பு, கலவரங்களுக்கு இடமில்லாத, மாசு இல்லாத, கல்வியறிவின்மை, வேலையின்மை, தீண்டாமை இல்லாத ஹிந்துஸ்தானை உருவாக்குவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நமது வேர்களுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் தருணத்தில், நமது வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து, நமது தாய்நாட்டை உலக தலைமையாக மாற்றும் பாதையில் நாம் முன்னேறுவோம்” என்றார். மேலும், அசாசுதுதின் ஓவைசி, மௌலானா தௌகிர் ராசா, பத்ருதீன் அஜ்மல் போன்ற வகுப்புவாத தலைவர்களின் தேசவிரோத செயல்பாடுகளை விமர்சித்த இந்திரேஷ் குமார், நாட்டில் பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை தூண்டுவதற்காக பி.எப்.ஐ, முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளையும் கண்டித்தார்.