கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி, “துப்பாக்கியை பயன்படுத்துவர்களை துப்பாக்கி கொண்டுதான் கையாள வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை காட்டப்படவேண்டியதில்லை.தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடுக்கு எதிராக செயல்படுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவசியமில்லை.கடந்த 8 ஆண்டுகளாக நம் நாட்டில் எந்த ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.சரணடைய முன்வருபவர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர்.காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் போன்றவை கடந்த 8 ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளது.மும்பை பயங்கரவாத தாக்குதலை மறக்க முடியாது.அதனை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ்அரசு கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது.முதலில் நம் அண்டை நாடுகள் நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை தெளிவாக உறுதி செய்ய வேண்டும்.நம் நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர்.ஆனால், புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் பாரதம் பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.நீங்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையைக் கொடுத்தேயாக வேண்டும் என்ற செய்தி அவர்களுக்கு உணர்த்தப்பட்டது.அப்படித்தானே ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும்?” என்றார்.