கர்நாடகாவின் தட்சிண கன்னடா பகுதியில், பா.ஜ.க இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரான பிரவீன், கடந்த 26ம் தேதி இரவு வெட்டி கொல்லப்பட்டனர். இதையடுத்து மங்களூரின் சூரத்கல்லில் பாசில் என்பவர் கடந்த 28ல் கொல்லப்பட்டார். இப்படி, கடந்த 10 நாட்கள் இடைவெளியில் மூன்று கொலைகள் நடந்துள்ளதால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அசம்பாவிதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகளை தவிர, மற்ற அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. பண்ட்வால் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 1வரை கடைகள் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உஷாராக இருக்க வேண்டும் என காவல்துறைக்கு உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கிய பகுதிகளில் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்கள் மூலமாக மத கலவரத்தை துாண்ட முயற்சி நடக்கலாம் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மங்களூரு, புத்துார், சுள்ளியா, கடபா, புத்துார் தாலுகா முழுதும் மதுக்கடைகள், ஹோட்டல், மால்கள் மூடப்பட்டுள்ளது.