மனதின் குரல் 91வது பகுதி

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இதுவரை நாம் ஏராளமான விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறோம். இந்த முறை மனதின் குரல் மிகவும் சிறப்பானது. காரணம், இந்த முறை சுதந்திரம் அடைந்த 75ம் ஆண்டினை பாரதம் நிறைவு செய்யவிருக்கிறது. நாம் அற்புதமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டத்தின் சான்றுகளாக ஆக இருக்கிறோம். இறைவன் நமக்கெல்லாம் ஒரு மிகப்பெரிய பேற்றினை அளித்திருக்கிறார். இன்றைய தினத்தன்று நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள். தங்கள் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்த ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை டிரோத் சிங் என்ற மேகாலயாவின் வீரம் நிறைந்த போராளி வலுவாக எதிர்த்தார். அவரது நினைவு நாளில், மக்கள் அவரை நினைவு கூர்ந்தார்கள், வரலாற்றிற்கு உயிர் கொடுத்தார்கள். சில வாரங்கள் முன்னதாக, கர்நாடகத்தில், அம்ருதா பாரதீ கன்னடார்த்தீ என்ற பெயர் கொண்ட வித்தியாசமான இயக்கம் செயல்படுத்தப்பட்டது. அதில், மாநிலத்தின் 75 இடங்களில் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவோடு இணைந்த பிரும்மாண்டமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜூலை மாதத்தில் சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் பங்களிப்பை  மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ‘சுதந்திரத்தின் ரயிலும் ரயில் நிலையமும்’ என்ற ஒரு சுவாரசியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேசத்தில் பல ரயில் நிலையங்களோடு சுதந்திரப் போராட்ட வரலாறு பின்னிப் பிணைந்திருக்கிறது. நேதாஜி சுபாஷ், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தந்திரமாகப் போக்குக் காட்டுவதில் வெற்றி பெற்ற ஜார்க்கண்டின் கோமோ ரயில் சந்திப்பு, ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் போன்ற தீரர்களுடன் சம்பந்தப்பட்ட லக்னோவுக்கு அருகில் உள்ள காகோடீ ரயில் நிலையம், தமிழரான, சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் பெயரை தாங்கிய தூத்துக்குடி மாவட்டத்தின் வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பு போன்றவற்றை குறித்து அறியும்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பட்டியல் மிகவும் நீளமானது. நாடெங்கிலும் 24 மாநிலங்களில் 75 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்களும் நேரம் ஒதுக்கி, அருகில் இருக்கும் இதுபோன்ற ஏதாவது ரயில் நிலையத்திற்குச் சென்று வாருங்கள். ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு ரயில் நிலையம் சென்று அந்த சம்பவத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்து ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுங்கள். மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, தேசத்திற்கு பங்களிக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. ஆகஸ்ட் 2 முதல் 15 வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவர்ணக் கொடியைப் பதிவிடலாம். ஆகஸ்ட் 2ல்தான் பிங்கலீ வெங்கையா பிறந்தார், அவர்தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தவர். அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகள். மகத்தான புரட்சியாளர் மேடம் காமா, மூவர்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர்.

நாமனைவரும் நமது கடமைகளை முழுமுனைப்போடு செயல்படுத்த வேண்டும். அப்போது தான் எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நம்மால் நிறைவேற்ற இயலும். அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க முடியும்.  ஆகையால் நமது அடுத்த 25 ஆண்டுகளின் இந்த அமிர்தகாலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் கடமைக்காலம் போன்றது.

கொரோனாவிற்கு எதிராக நம்முடைய போராட்டம் இப்போதும் தொடர்கிறது. பாரதநாட்டுப் பாரம்பரிய வழிமுறைகள் இதில் உதவிகரமாக இருப்பதை நாம் நன்கறிவோம். இதில், ஆயுஷ் அமைச்சகம் உலகுக்கு முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. உலகெங்கிலும் ஆயுர்வேதம் மற்றும் பாரதநாட்டு மருந்துகள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. ஆயுஷ் ஏற்றுமதிகள் சாதனை படைத்துள்ளன. இத்துறையில் பல புதிய ஸ்டார்ட் அப்புகளும் துவங்கப்படுகின்றன. உலக ஆயுஷ் உச்சிமாநாட்டில் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. சமீபத்தில் ‘Indian Virtual Herbarium’ என்ற பாரத மெய்நிகர் மூலிகைத் தொகுப்பு தொடங்கப்பட்டது. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட மூலிகை வகைமாதிரிகளும்,அதன் அறிவியல் தகவல்களும் கிடைக்கிறது.

ஆயுர்வேத நூல்களில் தேனை அமுதம் என்றே அழைத்திருக்கிறார்கள். தேனின் சுவை நமது விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைத்து வருவாயை அதிகரித்து வருகிறது. ஹரியானாவில் வசிக்கும் தேனீ வளர்ப்பாளர் சுபாஷ் கம்போஜ், விஞ்ஞான முறைப்படி தேனீ வளர்ப்பிற்கான பயிற்ச்சியைப் பெற்றார். ஆறு பெட்டிகளோடு தன் பணியைத் தொடங்கிய அவர் தற்போது 2,000 பெட்டிகளோடு தேனீக்களை வளர்க்கிறார். ஜம்முவின் பல்லீ கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார் 1,500க்கும் மேற்பட்ட காலனிகளில் தேனீக்களைப் பராமரிக்கிறார். ராணித் தேனீ வளர்ப்பில் பயிற்சி பெற்றார். இதன் வாயிலாக ஆண்டுதோறும் 20 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். கர்நாடக விவசாயி, மதுகேஷ்வர் ஹெக்டே, மத்திய அரசிடமிருந்து 50 தேனீ காலனிகளுக்கான உதவித்தொகை பெற்றார். இவர் வசம் 800க்கும் அதிகமான காலனிகள் உள்ளன.

நமது தேசத்தில் கொண்டாட்டங்களுக்கென பெரிய கலாச்சார மகத்துவம் உள்ளது. விழாக்கள், மக்களையும் மனங்களையும் இணைக்கின்றன. நமது தேசத்தில் பல்வேறு மாநிலங்களில் பழங்குடியினங்களின் பல பாரம்பரியமான விழாக்கள் நடைபெறுகின்றன. ஹிமாச்சல் பிரதேசத்தின் மிஞ்ஜர் விழா, தெலங்கானாவின் சமக்கா சரலம்மா ஜாத்ரா விழா, ஆந்திரப் பிரதேசத்தின் மாரீதம்மா விழா, ராஜஸ்தானத்தின் கராசியா பழங்குடியினத்தவர் சியாவாத் திருவிழா, சத்தீஸ்கரின் மாவ்லீ விழா, மத்திய பிரதேசத்தில் பகோரியா விழா, குஜராத்தின் தர்ணேதர், மாதோபூர் விழாகள் என பல விழாக்கள் நடக்கின்றன. நவீனகாலத்தில், சமூகத்தின் இந்த தொன்மையான தொடர்புகள், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பலப்படுத்த அவசியமானது. நமது இளைஞர்களை இதோடு நாம் இணைக்க வேண்டும். நீங்கள் திருவிழக்களுக்குச் செல்லும்போது, அந்த காட்சிகளைப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிருங்கள். ஹேஷ்டேகைக் கூட பயன்படுத்தலாம். நீங்கள் கலாச்சார அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் படங்களைத் தரவேற்றம் செய்யலாம். திருவிழாக்கள் தொடர்பான அருமையான படங்களை அனுப்புவோருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

பாரதத்தில் இப்போது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே வேளையில் பாரதம், 2,600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான விளையாட்டுப் பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தச் சாதனைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் நடந்துள்ளது. பாரதத் தயாரிப்பாளர்கள் இப்போது, நமது புராணங்கள், வரலாறு, கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பொருட்களைத் தயாரித்து வருகிறார்கள். விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்முனைவோர் பயனடைந்து வருகிறார்கள். அருமையான செயல்களைப் புரிந்துவரும் அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும், ஸ்டார்ட் அப்புகளுக்கும் நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் இயன்றவரை அதிக அளவில் பாரத விளையாட்டுப் பொருட்களை வாங்குங்கள்.

வகுப்பறையாகட்டும், விளையாட்டு மைதானமாகட்டும், இன்று நமது இளைஞர்கள், அனைத்துத் துறைகளிலும் தேசத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். பி.வி. சிந்து சிங்கப்பூர் ஓப்பன் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். நீரஜ் சோப்ரா பாரதத்துக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அயர்லாந்தின் பேரா பேட்மிண்டன் இண்டர்நேஷனல் மாற்றுத் திறனாளிகளுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் நமது விளையாட்டு வீரர்கள் 11 பதக்கங்களை வென்று தேசத்திற்குப் பெருமிதம் சேர்த்திருக்கிறார்கள். சென்னையில் ஜூலை 28ல் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியது. அதன் புரவலராக இருப்பது பாரத நாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம். இதே நாளன்று, இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுக்களும் தொடங்கின. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், நாட்டுமக்கள் தரப்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அக்டோபரில் ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியையும் பாரதம் நடத்த இருக்கிறது.

அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, நமது அடுத்த 25 ஆண்டுகளின் பயணம் தொடங்கியிருக்கும். நமது இல்லம், நம்மைச் சேர்ந்தோர் இல்லங்களில், நமக்கு மிகவும் பிரியமான மூவண்ணக் கொடி பறக்கட்டும், இதன் பொருட்டு நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  நீங்கள் அனைவரும் இந்த முறை, சுதந்திரத் திருநாளை எப்படிக் கொண்டாடினீர்கள், சிறப்பாக என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை எல்லாம் கண்டிப்பாக என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த முறை நாம் நமது இந்த அமுதகாலத்தின் பல்வேறு வண்ணங்கள் பற்றி மீண்டும் உரையாடி மகிழ்வோம்.