நீதித்துறையில் தொழில்நுட்பம்

டெல்லி விக்யான் பவனில் நடந்த முதல் அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் பேசிய பிரதமர் மோடி, “பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எளிமையாக வாழ்வதற்கும், எளிதாக வணிகம் செய்வதற்கும் சமமாக நீதியின் எளிமை அவசியம். சில ஆண்டுகளுக்கு முன்பு பீம், யு.பி.ஐ செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அது ஒரு சிறிய துறைக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று சிலர் கருதினார்கள். ஆனால் இன்று கிராமங்களில் கூட டிஜிட்டலில் பணம் செலுத்தப்படுவதை நாம் காண்கிறோம். உலகின் அனைத்து நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் 40 சதவீதம் பாரதத்தில் தான் நடக்கிறது.

தொழில்நுட்பம், புதுமை ஆகியவற்றின் திறன் அதிகமாக இருக்கும்போது, ​​நீதி வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இப்போதைவிட சிறந்த நேரம் வேறெதுவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ், நாட்டின் நீதிப் பணிகள், தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் திசையில் வேகமாகச் செல்வதில் மகிழ்ச்சி. இ கோர்ட்ஸ் மிஷனின் கீழ், நாட்டில் மெய்நிகர் நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமீறல் போன்ற குற்றங்களுக்காக 24 மணி நேர நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மக்களின் வசதிக்காக நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங் உள்கட்டமைப்பும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சுமார் 60 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா காலகட்டத்தில் வந்த இந்த மாற்று, இப்போது அமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நமது நீதித்துறையானது பழங்கால பாரத நீதியின் மதிப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கும் அதே நேரத்தில் 21ம் நூற்றாண்டின் உண்மைகளுடன் பொருந்தவும் தயாராக உள்ளது என்பதற்கு இது சான்றாகும். கடந்த 8 ஆண்டுகளில் நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.9,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது நீதி வழங்குவதற்கான வேகத்தை அதிகரிக்கும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து சாமானிய குடிமக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்வதில் தொழில்நுட்பமும் பெரும் பங்காற்ற முடியும். விசாரணைக் கைதிகள் தொடர்பில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை அவசியம். இன்னும் பலர் நீதிக்காகக் காத்திருக்கின்றனர். அத்தகைய கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்டப்பணி அதிகாரிகள் ஏற்கலாம். விசாரணைக் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும்” என கூறினார்.