மாட்டும் மற்றொரு திருணமூல் தலைவர்

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் தொழில் துறை அமைச்சரான பார்த்தா சட்டர்ஜி, சமீபத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது பெண் உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம், தங்கக்குவியல்கள் கைப்பற்றப்பட்டன. பார்த்தா சட்டர்ஜி ஏற்கனவே கல்வி அமைச்சராக இருந்தபோது, ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்து சம்பாதித்த பணம் இது என கூறப்படுகிறது. பார்த்தா சட்டர்ஜியின் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அக்கட்சியின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, நேற்று பணமோசடி தடுப்புச் சட்டம் 2002ன் படி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கல்யாணி சோல்வெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருணமூல் காங்கிரஸ் கட்சியின் ராய்கஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கிருஷ்ண கல்யாணி என்பவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.