தேர்தல்களின்போது ஓட்டுகளைப் பெற அரசு பணத்தில் இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவ்வாறு இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணைக்குப் பிறகு, “இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஆனால், ஒரு நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன், இதை ஒரு முக்கியமான பிரச்னையாக அரசு பார்க்கவில்லையா, இலவச அறிவிப்புகள் தொடர வேண்டுமா, வேண்டாமா? உங்களுடைய பதிலை தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் நிதி கமிஷனின் கருத்தை கேட்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறி உத்தரவிட்டது.