சதுரங்கமும் பாதுகா சஹஸ்ரமும்

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்: ஸ்ரீ ரங்கநாதனின் பாதகமலங்களின் பெருமையைப் படித்து இன்புறவல்ல பாடல்களைக் கொண்டது. இந்த அருட்பெட்டகத்தில் பக்திச்சுவை ததும்பும் பல பத்ததிகளில் உள்ள ஸ்லோகங்கள் பதம், எழுத்து, ஒலி நயம் கலந்து படித்து, பரவசப்படும் அளவுக்கு கவி நயத்தோடும், பொருள் நயத்தோடும், அதியற்புதமாய் கிறங்க வைக்கின்றார் சுவாமி வேதாந்த தேசிகர். 1,000 ஸ்லோகங்களை ஒரே இரவுக்குள் பாடியவர். அதில் சில பல ஸ்லோகங்கன் சித்திரக்கவியாக அமைந்திருக்கும். பலவிதமான சித்திரங்கள், பலவிதமான வியக்கவைக்கும் வாக்கிய அமைப்பு, போன்றவை இருக்கும்.

எடுத்துக்காட்டாக,

அநந்ய சரண: ஸீதந் அநந்த க்லேச ஸாகரே

சரணம் சரண த்ராணம் ரங்க நாதஸ்ய ஸம்ஸ்ரயே (915)

இந்த பாடலின் முதல் வரியை ஒரு முறை மீண்டும் படியுங்களேன்! உங்கள் உதடுகள் இரண்டும் ஒட்டுகிறதா?

இல்லைதானே..? அடுத்த வரியில், சேராத உதடுகள் ஒன்று சேர்கின்றது. இந்த ஸ்லோகம் அமைந்த இந்த பத்ததிக்கு ‘சித்ர பத்ததி’ என்று பெயர்.

ராமபாத கதாபாஸா ஸா பாதா கத பாமரா

காத் உபாநஞ்ச காஸஹ்யா ஹி ஆஸ காஞ்சந பாதுகா (919)

இதில், முதல் பாதத்தைத் திருப்பிப் படித்தால் இரண்டாம் பாதம் ஆகிறது. இது போன்றே இரண்டாம் பாதத்தைத் திருப்பினால் முதல் பாதம் ஆகிறது. இது பிரதிலோம யமகம்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் குதூகலத்துடன் நடைபெறும் இந்த நேரத்தில், தேசிகர் சுவாமிகளின் ஸ்லோகங்களில் மற்றோரு ஸ்லோகம் (929, 930) ஒன்றை எடுத்துக்காட்டாக எடுத்து இயம்பி, சதுரங்கத்திற்கும் இந்தப்பாவிற்கும் உள்ள சம்பந்தத்தை தெரிந்து கொள்வோம்.

செஸ் விளையாட்டில் ‘ஃநைட்’ எனப்படும் குதிரையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அது நகரும் விதமே அலாதியானது. ஒரு குறுக்குக் கட்டம் + ஒரு நேர்க்கட்டம் என்று வித்தியாசமான நகர்வு. அப்படிப்பட்ட குதிரை சதுரங்கப் பலகையில் உள்ள 64 கட்டங்களிலும் (இரண்டாம் முறை வராமல்) நகரக்கூடிய வகையில் அதனை  பாடலாகவே வடித்துள்ளார்…. சதுரங்கக் கட்டத்தில் முதல் ஸ்லோகத்தை நான்கு வரிசைகளில் எழுத்துக்களை எழுதி, குதிரை நகர்வது போல் படித்தால் அடுத்த ஸ்லோகம் வரும். 32 கட்டங்களுக்கு ஒரு முறை என்று இரண்டு முறையாக இந்த ஸ்லோகங்களை எழுதிப் படித்துப் பார்க்கும்போது, குதிரை நகர்வாக ஸ்லோகம் அமைந்திருத்தலை கவனிக்க முடியும். கவிரசத்தைப் பருக முடியும். பசுமரத்தாணி போல எளிதாக நமது மனதில் ஸ்லோகம் பதியும்.

ஸ்திராகஸாம் ஸதா ஆராத்யா விஹத ஆகதத அமதா

ஸத் பாதுகே ஸராஸா மா ரங்க ராஜ பதம் நய (929)

ஸ்திதா ஸமய ராஜத்பா கதரா மாதகே கவி

துரம்ஹஸாம் ஸந்நதாதா ஸாத்யா அதாப கரா ஆஸரா (930)

(1) ஸ்தி (2) தா (3) ஸ (4) ம (5) ய (6) ரா (7) ஜ (8 ) த்பா (9) க (10) த (11) ரா (12) மா (13) த (14) கே (15) க (16) வி

(17) து (18) ரங் (19) ஹ (20) சாம் (21) ஸ (22) ம்ந (23) தா (24) தா (25) ஸா (26) த்யா (27) தா (28) ப (29) க (30) ரா (31) ஸ (32) ரா

929-வது ஸ்லோகத்தினை நேரடியாக எழுத வேண்டும் …

அந்த ஸ்லோகத்தில் வரும் வார்த்தைகளே 930வது ஸ்லோகத்தில் குதிரையின் நகர்வாக வரும் …

(தொடரும்)

ஆர். கிருஷ்ணமூர்த்தி