திருணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் ஸ்கூல் சர்வீஸ் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக சுமார் 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இருவரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவர்களை ஆகஸ்ட் 3, 2022 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டது. உடல் நிலையை காரணம் காட்டி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்னதாக, அவர் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டபோது, வெளியே கூடியிருந்த மக்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது ‘திருடன் திருடன்’ என கோஷமிட்டனர். இந்நிலையில், பார்த்தா சாட்டர்ஜி மீது மற்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் தனது மெய்க்காப்பாளரான பிஸ்வம்பர் மோண்டல் என்பவரின் சகோதரர்கள், உறவினர்கள் என 10 பேருக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு வேலைகளை பெற உதவியதாக புதிதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் அவர்களின் பணிவிவரங்கள் மற்றும் அவர்கள் அதை எவ்வாறு பெற்றனர் என்பது குறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.