நஞ்சியம்மாவை வாழ்த்திய அண்ணாமலை

டெல்லியில் சமீபத்தில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை அள்ளியது. மலையாளத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக சிறந்த பின்னணி பாடகர் (பெண்) விருது பழங்குடியினரான நஞ்சியம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர், “அறியப்படாத ஒரு மனுஷி நான். ஆடு மாடு மேய்ப்பது என பல தொழில் செய்துகொண்டிருந்த என்னை, வெளியுலகுக்கு கொண்டுபோய் காட்டியது இயக்குநர் சச்சி சார் மட்டுமே. மக்கள் சந்தோஷமாக எனக்கு வரவேற்பு கொடுத்ததுடன், வெளியுலகை அறியச் செய்தார்கள். ஆனால், வெளியுலகத்தை எனக்கு காட்டிய சச்சி சார் இன்று இந்த உலகத்தில் இல்லை. அவருக்காக இந்த விருதை நான் பெறுவேன். அறிந்தோ, அறியாமலோ இந்தப் படத்தில் என்னை இணைத்தது அவர் தான். இன்று சச்சி சார் இருந்திருந்தால் நான் விருது வாங்குவதை நினைத்து பெருமைப்பட்டிருப்பார். விருது கிடைத்ததில் சந்தோஷம். நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சந்தோஷம் கிடைக்க வேண்டும்” என்று பேசினார். இந்நிலையில், நஞ்சியம்மாவை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், ”இருளர் பழங்குடியினரின் பெருமை, ஸ்ரீமதி நஞ்சம்மா அவர்கள். தனது குரலால் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தவர். அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அவரை சந்தித்தது போற்றுதலுக்குரியது. நஞ்சம்மா பாட்டிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.