கனடா நாட்டின் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடர் மாகாணங்களில் உள்ள மவுண்ட் கேஷெல் கிறிஸ்தவ அனாதை இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, 13 கிறிஸ்தவ சர்ச்கள் உட்பட 43 கத்தோலிக்க சர்ச் சொத்துக்களை விற்பனை செய்ய கனடா நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, வரும் காலங்களில் மேலும் 70 சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளதால், இழப்பீடு வழங்குவதற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில், ‘இந்த விற்பனையின் பின்விளைவுகள் கிழக்கு நியூஃபவுண்ட்லாந்தில் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கத்தோலிக்கர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சொத்துக்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சர்ச் நோக்கங்களுக்காக கட்டிடங்களைப் பயன்படுத்த மாட்டார்கள்’ என உள்ளூர் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ‘1975ம் ஆண்டுகளில், கிறிஸ்தவ அனாதை இல்லத்தை நடத்தி வந்த ஐரிஷ் ரோமன் கத்தோலிக்க சகோதரர்கள் அங்குள்ள சிறுவர்கள் மீது நடத்திய பாலியல் துஷ்பிரயோகங்கள், அப்போது காவல்துறை விசாரணைக்கு பிறகு எந்த தண்டனையும் இல்லாமல் முடிவடைந்த்து. ஆனால், அந்த மையம் பாலியல் துஷ்பிரயோகச் செயல்பாடுகளின் தளமாக இருந்தது என்பதை பொதுமக்கள் அறிந்து கொண்டனர். அதுகுறித்த வதந்திகள் அதிகரித்ததையடுத்து மீண்டும் 1989ல் விசாரணை நடத்தப்பட்டது. 1992ல் அந்த ஐரிஷ் சகோதரர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியதுடன் 12.2 மில்லியன் டாலர்கள் இழப்பீடு செலுத்தினர், அதே நேரத்தில் மாகாண அரசும் தன் பங்கிற்கு 8.5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கியது’ என்பது இதன் பின்னணி.