போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி) பொதுச் செயலாளர் ஆர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின்போது ஏற்பட்ட குளறுபடிகளை சரிசெய்து, அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி, 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒரே ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பலன்களை விரைவாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 81 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வையும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும் அனைத்து மண்டலப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களிலும் இன்று (25 ஜூலை) ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் தொழிற்சங்க நிர்வாகிகள், சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் பங்கேற்பார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.