கல்லூரிகளில் சுதந்திர தின போட்டிகள்

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யு.ஜி.சி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில், ’75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘வீடுகள் தோறும் தேசியக் கொடி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட்.13, 14, 15 தேதிகளில் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு வாரம் முன்னதாக, மாணவர்களிடையே சுதந்திர தினம் குறித்த தாக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டுரை, ஓவியம், பாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் வீதி நாடகம், பஜனை நடத்தி, அந்த நிகழ்வுகளின்போது தேசியக் கொடியை பரிசளிக்க வேண்டும். இதற்கான தேசியக் கொடிகளை www.harghartiranga.com இணையதளத்தில் வாங்க வேண்டும். தேசியக் கொடிகளை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். அனைத்து பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களும், ‘வீடுகள் தோறும் தேசியக் கொடி’ பிரச்சாரம் குறித்த விவரங்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களிடம் தெரிவித்து, அவர்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றச் செய்து இப்பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கெடுத்ததற்கான வீடியோ பதிவுகளை தங்களது டுவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன’ என கூறப்பட்டுள்ளது.