இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும்

அடுத்த கல்வியாண்டிற்குள் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தற்போது 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் தற்போது செயல்பட்டு வருகிறது. இவையனைத்தும் இருபாலர் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுக் கல்வி முதன்மை செயலாளர் மற்றும் பொதுக் கல்வி இயக்குநர்கள் மற்றும் மாநில கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை இது தொடர்பாக ஒரு செயல் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இருபாலர் பள்ளி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கேரளா கல்வித்துறை விரிவான அறிக்கையை 90 நாட்களுக்குள் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  இருபாலர் கல்வி முறையை அமல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பள்ளிகளில் உடற்பயிற்சிக் கல்வி பயிற்சிகள் அளிக்க வேண்டும், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும். இருபாலர் கல்விமுறையின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.