கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 (எம்.எஸ் சட்டம் 2013)ன்படி, கைகளால் மலம் அள்ளுவது 6.12.2013 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளிலிருந்து, எந்தவொரு தனிநபரும், முகமையும், கைகளால் மலம் அள்ள எவரையும் ஈடுபடுத்தவோ, பணியமர்த்தவோ முடியாது. சட்டத்தை மீறுபவர்கள் மீது (எம்.எஸ் சட்டம் 2013) பிரிவு 8ல், இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ், அக்டோபர் 2 2014 முதல், கிராமப்புறங்களில் 10.99 கோடிக்கும் அதிகமான சுகாதாரக் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில், சுகதாரமற்ற 62.65 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் சுகாதாரக் கழிவறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த முயற்சி, கைகளால் மலம் அள்ளுவதை முடிவுக்கு கொண்டு வர பெரும் பங்காற்றியுள்ளது. இத்துறையில் பணியாற்றுவோரிடமிருந்து கருத்துகளை பெற்ற பிறகு, இந்த நடைமுறையை தொடர்வது குறித்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தூய்மை பிரச்சாரம் செயலியை அறிமுகம் செய்தது. எந்தவொரு நபரும், சுகாதாரமற்ற கழிவறைகள், கைகளால் மலம் அள்ளுபவர்கள் பற்றிய விவரங்களை செயலியில் பதிவேற்றலாம். இந்த பதிவேற்றம் மாவட்ட நிர்வாகங்களால் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு சுகாதாரமற்ற கழிவறைகளும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், சரியான முடிவுக்கு வர முடியவில்லை’ என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மக்களவையில் தெரிவித்தார்.