தேசிய இளைஞர் கொள்கை 2014’ஐ ஆராய்ந்த பிறகு மத்திய அரசு தேசிய இளைஞர் கொள்கைக்கான புதிய வரைவை தயாரித்துள்ளது. இந்த வரைவு பல்வேறு தரப்பு பிரிவினரிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. இந்த வரைவானது, 2030ம் ஆண்டுக்குள் பாரதம் அடைய விரும்பும் இளைஞர் மேம்பாட்டிற்கான பத்தாண்டு தொலைநோக்கு பார்வையை வழங்குவதாக உள்ளது. இது, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைதல், இளைஞர் தலைமைப்பண்பு, மேம்பாடு, ஆரோக்கியம், உடற்தகுதி, விளையாட்டு, சமூகநீதி ஆகிய முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தியுள்ளது. மேலும், அனைத்து இளைஞர்களுக்கும் தொழில் வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை திறன்களை வழங்கும் தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒத்திசைக்கப்பட்ட கல்வி முறையை தேசிய இளையோர் கொள்கை முன்வைக்கிறது. பாரதத்தின் இளைஞர்களை நாளைய சிறந்தத் தலைவர்களாக உருவாக்க, தன்னார்வச் சூழலை வலுப்படுத்துதல், தலைமைத்துவ வளர்ச்சிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஒரு துடிப்பான இளைஞர்கள் செயல்படுத்தும் தளத்தை நிறுவ தொழில்நுட்பத்தை அணிதிரட்டுதல் ஆகியவற்றைக் கொள்கை பரிந்துரைக்கிறது. இந்த கொள்கை வரைவு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார்.